பழுது நீக்கும் டிராலி வாகனம் தண்டவாளத்தில் தடம் புரண்டது: பெங்களூருவில் 10 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
|பெங்களூருவில் பழுதுநீக்கும் டிராலி வாகனம் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் தடம் புரண்டதால் மெட்ரோ ரெயில் சேவை 10 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், இனிமையான பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது மாநகரில் சுமார் 69 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும் (ஊதா நிற பாதை), நாகசந்திராவில் இருந்து பட்டு நிறுவனம் வரையிலும் (பசுமை பாதை), கே.ஆர்.புரத்தில் இருந்து ஒயிட்பீல்டு வரையிலும் (ஊதா நிற பாதையின் தொடர்ச்சி) மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படுகிறது.
இந்த ரெயில்களில் தினமும் சுமார் 6 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் மெட்ரோ ரெயில்களின் சேவை தொடங்கியது.
காலை 6.30 மணியளவில் பசுமை பாதையில் அதாவது நாகசந்திரா-பட்டு நிறுவன பாதையில் ராஜாஜிநகர் ரெயில் நிலையம் அருகில் மெட்ரோ ரெயில் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு, பழுதுநீக்கும் டிராலி வாகனம் தடம் புரண்டது. அதாவது தண்டவாள கம்பிகளுக்கு இடையில் வாகனத்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது.
உடனே மெட்ரோ ரெயில் ஊழியர்கள், அதிகாரிகள்
சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த டிராலி வாகனத்தை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுத்தப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக பசுமை பாதையில் மெட்ரோ ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. அதாவது யஷ்வந்தபுரம்-மந்திரிமால் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் உள்ள ஸ்ரீராமபுரம், குவெம்புநகர், ராஜாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், மைசூரு சோப்பு நிறுவனம் மெட்ரோ ரெயில் நிலையங்களில், ரெயில் ஓடாததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதன் எதிரொலியாக யஷ்வந்தபுரம், தாசரஹள்ளி உள்பட பல மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. யஷ்வந்தபுரத்தில் ஆயிரக்
கணக்கான பயணிகள் கூடியிருந்தனர். அப்போது சில பயணிகள் கடும் கோபம் அடைந்து மெட்ரோ ரெயில் நிலைய நுழைவுவாயிலை காலால் எட்டி உதைத்தனர். மேலும் கூச்சலிட்டு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து பயணிகள் கூட்டத்ைத கட்டுப்படுத்தும் வகையில் பசுமை பாதையில் ஒரு வழித்தடத்தில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி நாகசந்திராவில் இருந்து யஷ்வந்தபுரம் வரையிலும், சம்பிகே ரோடு மந்திரிமாலில் இருந்து பட்டு நிறுவனம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. ஒரு வழித்தடத்தில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டதால், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் யஷ்வந்தபுரம், தாசரஹள்ளி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் மெட்ரோ ரெயில்களுக்கு கால்கடுக்க நீண்ட நேரம் காத்து நின்று சோர்வடைந்தனர்.
இதற்கிடையே டிராலி வாகனம் தடம்புரண்டதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மீட்பு பணி முழுவேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரி ஒலிப்பெருக்கி மூலம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தடம் புரண்ட அந்த பழுது நீக்கும் வாகனத்தை மீண்டும் சரியான பாதையில் நிறுத்த ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய பெங்களூரு மெட்ரோ ரெயில் அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரெயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறி அதற்கு தீர்வு காண உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் வழங்கிய ஆலோசனை அடிப்படையில், ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் தண்டவாள இடுக்கில் சிக்கிய பழுது நீக்கும் டிராலி வாகனத்தை ராட்சத கிரேன் மூலம் மேலே தூக்கி அகற்றப்பட்டு, கீழே இறக்கப்பட்டது.
இந்த பணி மதியம் 2 மணியளவில் நடந்தது. பின்னர் அந்த டிராலி வாகனம் ராஜாஜிநகர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அதன் பிறகு மாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை சரியானது. அதைத்தொடர்ந்து வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. பொதுமக்களும் வழக்கம் போல் மெட்ரோ ரெயில்களில் பயணத்தை தொடங்கினர்.
இந்த சம்பவம் காரணமாக மெட்ரோ ரெயில் பசுமை பாதையில் சுமார் 10 மணி நேரம் முழுமையான அளவில் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் யஷ்வந்தபுரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் யஷ்வந்தபுரம், தாசரஹள்ளி, சம்பிகே ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.