இந்தியாவில் 'மெட்டா ஏஐ' அறிமுகம்.. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பயன்படுத்தலாம்
|அன்றாட பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு மெட்டா ஏஐ உதவும் என்று மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
மெட்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான 'மெட்டா ஏஐ' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் பயனர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டை பயன்படுத்த முடியும். தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. படிப்படியாக அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கப்பெறும் என தெரிகிறது.
மெட்டா நிறுவன சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் மெட்டா ஏஐ வலைதளத்திலும் இதனை பயன்படுத்தலாம். இது சமீபத்திய ஏஐ மாடலான லாமா-3 (Llama 3) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
'மெட்டா ஏஐ' சேவையானது கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் 'மெட்டா கனெக்ட்' நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் உலக அளவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இதன் பயன்பாட்டை தள்ளி வைத்திருந்தது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம், அதன் ஜெமினி சாட்பாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், மெட்டாவும் தனது ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
அன்றாட பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு மெட்டா ஏஐ உதவும் என்று மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
மற்ற ஜெனரேஷன் ஏஐ சாட்பாட்களை போலவே இதிலும் பயனர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். இந்த சாட்பாட் உதவியுடன் மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் ஜிப் உருவாக்க என பல பணிகளை செய்யலாம். இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் பக்கத்தில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.