< Back
தேசிய செய்திகள்
வியாபாரிகள் உடனே வணிக வரியை செலுத்த வேண்டும்
தேசிய செய்திகள்

வியாபாரிகள் உடனே வணிக வரியை செலுத்த வேண்டும்

தினத்தந்தி
|
16 Sept 2023 12:15 AM IST

கோலார் தங்கவயல் நகரசபைக்கு செலுத்த வேண்டிய வணிக வரியை வியாபாரிகள் உடனடியாக செலுத்திட வேண்டும் என்று நகரசபை கமிஷனர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோலார் தங்கவயல்

ஊழியர்களுக்கு ஊதியம்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபை கமிஷனர் பவன் குமார் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலார் தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட நகரசபைக்கு சொந்தமான கட்டிடங்களில் வணிகர்கள், வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக நகரசபைக்கு செலுத்தவேண்டிய வரியை அவர்கள் செலுத்தாமல் உள்ளனர். வரியை செலுத்தினால் தான் நகரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுடன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியும்.

உரிய நடவடிக்கை

நகரில் உள்ள வியாபாரிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை நடத்தி வருபவர்கள் உள்ளிட்டோர் நகரசபைக்கு செலுத்தவேண்டிய பல கோடி ரூபாய் வணிக வரியை உடனே செலுத்தவேண்டும்.

ஏனெனில் ஏற்கனவே பல கோடி ரூபாய் வணிக வரி வசூலிக்கப்படாமல் பாக்கி உள்ளது. நகரசபை நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

எனவே இதுபோன்ற பிரச்சினையை சமாளிக்க மேற்கண்ட அனைவரும் தாமாக முன்வந்து வரியை செலுத்தவேண்டும். வணிக வளாகங்கள் நடத்துவோர் வணிக உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அபராதம் விதிக்கப்படும்

கோலார் தாலுகாவில் பாலிதீன் பைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாலிதீன் பைகளை விற்போரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அடிக்கடி கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள்.

பாலிதீன் பைகள் விற்பனை செய்வதை கண்டறிந்தால், அவர்களின் கடைகள், வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பதுடன் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நகரசபை மேலாளர் சரஸ்வதி, அதிகாரி ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்