< Back
தேசிய செய்திகள்
இறந்த தாயின் பிணத்துடன் 4 நாட்கள் வசித்த மனநலம் பாதித்த மகள்... அடுத்து நடந்த சோகம்
தேசிய செய்திகள்

இறந்த தாயின் பிணத்துடன் 4 நாட்கள் வசித்த மனநலம் பாதித்த மகள்... அடுத்து நடந்த சோகம்

தினத்தந்தி
|
20 May 2024 8:49 AM IST

இறந்த தாயின் உடலுடன் 4 நாட்களாக பிரகதி, தண்ணீர், உணவு இன்றி இருந்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா முதுகோபாடி அருகே தாசனஹடி பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி ஷெட்டி (வயது 62). இவரது மகள் பிரகதி ஷெட்டி (32). இவர் மனநலம் பாதித்தவர் ஆவார். கடந்த 15 ஆண்டுளுக்கு முன்பு ஜெயந்தியின் கணவர் இறந்துவிட்டார்.

அதன்பிறகு ஜெயந்தி தான் மனநலம் பாதித்த மகள் பிரகதியை கவனித்து வந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு சமீபத்தில் கால் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாலும் மகள் பிரகதியை ஜெயந்தி சிரமப்பட்டு கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெயந்தி வீட்டில் மின்விளக்கு ஒளிரவில்லை. வீடும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் தாயும், மகளும் கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என அக்கம்பக்கத்தினர் கருதினர். இதையடுத்து கடந்த 16-ந்தேதி அந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசி உள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், ஜெயந்தியின் செல்போனுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அப்போது வீட்டுக்குள் இருந்து செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அழைப்பை எடுத்து ஜெயந்தி பேசவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது பிரகதி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக குந்தாப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஜெயந்தி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பிரகதி மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரகதியும் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் ஜெயந்தி மற்றும் பிரகதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி, கடந்த 13-ந்தேதியே உயிரிழந்துவிட்டார். ஜெயந்தி இறந்தது அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தெரியவில்லை. இறந்த தாயின் உடலுடன் 4 நாட்களாக பிரகதி, தண்ணீர், உணவு இன்றி இருந்துள்ளார். உணவு, தண்ணீர் உட்கொள்ளாததால் மிகவும் சோர்வடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்