ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் மனநலம் முக்கிய பங்காற்றுகிறது;மந்திரி சுதாகர் பேச்சு
|ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் நல்ல மனநலம் முக்கிய பங்காற்றுகிறது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
மூளை சுகாதாரம்
பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் மூளை சுகாதாரம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதுடன் எப்படி வாழ்கிறோம் என்பதும் முக்கியம். மனநில ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை உண்டாக்கும். இது சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெங்களூருவில் நிமான்ஸ் போன்ற பெரிய ஆஸ்பத்திரி இருப்பது நமது பாக்கியம் ஆகும்.
மனநல பாதிப்பு
தொற்றுநோய் அல்லாத நோய்கள் அதாவது மூளை உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மனநலம், நரம்புகள், பக்கவாதம், தலைவலி போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறப்பவர்களில் சுமார் 8 சதவீதம் பேர் மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இறப்புக்கான காரணங்களில் மனநல பாதிப்பு 2-வதாக உள்ளது.
மத்திய அரசு டி-மனசு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு சிக்பள்ளாப்பூர், கோலார், பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் நிமான்சுடன் இணைந்து இந்த டி-மனசு திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்துகிறோம். வரும் நாட்களில் இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து 3 மாதங்கள் பயிற்சி அளித்துள்ளோம். வரும் நாட்களில் இந்த பயிற்சி நர்சுகள், ஆஷா ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இதற்காக நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் நல்ல மனநல ஆரோக்கியத்தை பேணுவது முக்கிய பங்காற்றுகிறது.
இவ்வாறு சுதாகர் பேசினார்.