இந்திய ஒற்றுமை யாத்திரை : காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது - மெகபூபா முப்தி
|ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். அவரது யாத்திரை, தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் நிறைவடைகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களைக் கடந்து நடைபயணத்தின் இறுதி பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
இன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டார். முப்தியுடன் நிறைய பெண்களும் கலந்து கொண்டனர். சுர்சு என்ற இடத்தில் பல தொண்டர்கள் முன்னிலையில் இருவரும் நடைபயணத்தை மேற்கொண்டனர்
இந்த நடைபயணம் தொடர்பாக மெகபூபா முப்தி தனது டுவிட்டரில், " ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வருவது காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான காஷ்மீரி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தியுடன் பயணம் மேற்கொண்டது சிறப்பான அனுபவமாக அமைந்து" என்று அவர் பதிவிட்டுள்ளார்.