மேகதாது திட்டம்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம்
|மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரு,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசு அதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது. அணை கட்டுமானத்தின் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வது குறித்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம், கடந்த மே மாதம் 30-ஆம் தேதி கர்நாடக அரசு விண்ணப்பித்திருந்தது.
இந்த விண்ணப்பம் மீதான கூடுதல் தகவல்களை மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், அதற்குப் பதில் அளித்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி கர்நாடக நீர்வளத்துறை கடிதம் எழுதியிருந்தது. அதில், மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை எனவும், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க தடையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு விண்ணப்பத்தை விரைவில் பட்டியலிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்த கடிதத்தை கர்நாடக அரசு கடந்த மாதம் அனுப்பியிருந்தாலும், அது பற்றிய தகவல் தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது.