< Back
தேசிய செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும் பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் - நிதிஷ்குமார்
தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும் பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் - நிதிஷ்குமார்

தினத்தந்தி
|
29 April 2023 10:32 PM IST

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டப்போவதாக நிதிஷ்குமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை அணி சேர்க்கிறார்

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார்.

சமீபத்தில் அவர் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுடன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோரை சந்தித்தார்.

மம்தாவுடன் சந்திப்பு

மேலும் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவுடன் கொல்கத்தாவுக்கு சென்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியையும் சந்தித்துப்பேசினார். அப்போது நிதிஷ்குமாரிடம் மம்தா பானர்ஜி பேசும்போது, ஜெயப்பிரகாஷ் நாராயணின் சோசலிச இயக்கம், பீகாரில் தான் தொடங்கியது. நாம் பீகாரில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினால், நாம் எங்கிருந்து தொடங்குவது என்பதை முடிவு செய்யலாம் என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

அத்துடன் மம்தாவை சந்தித்த சூட்டோடு சூடாக அவர்கள் லக்னோ சென்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நிதிஷ்குமார் அடுத்தடுத்து எதிர்க்கட்சித்தலைவர்களைச் சந்தித்துப்பேசுவதும், அவர்கள் எதிர்க்கட்சிக்கூட்டணிக்கு ஆதரவு காட்டுவதும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம்

இந்த நிலையில் பாட்னாவில் நிதிஷ்குமார் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும், பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை சூசகமாக உணர்த்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் நிச்சயமாக ஒன்றாக அமர்ந்து பேசுவோம். 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிப்போம்.

தற்போது தலைவர்கள் பலரும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். அது முடிந்ததும், நாங்கள் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்துக்கான இடத்தை முடிவு செய்வோம். பாட்னாவில் நடத்தலாம் என ஒருமனதாக அனைவரும் முடிவு செய்தால், இங்கு அந்தக்கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தை பாட்னாவில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்