அலட்சியத்தின் உச்சம்: பெண்ணிற்கு தலையில் ஆணுறையை வைத்து கட்டுப்போட்ட சுகாதார மைய ஊழியர்
|தலையில் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக ஆணுறை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரீனா,
மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தில் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக ஆணுறை பயன்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரீனாவில் உள்ள போர்சா என்ற சுகாதார மையத்துக்கு ரேஷ்மா பாய் என்ற பெண் ஒருவர் தலையில் அடிபட்ட நிலையில் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக, அந்தப் பெண்ணின் தலையில் அட்டை ஒன்றை வைத்து கட்டியிருக்கின்றனர்.
அவருக்கு வலி அதிகமாக இருந்தால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லுபடி சுகாதார மையத்தில் அறிவுறுத்தியுள்ளனர். வலி தொடர்ந்து நீடிக்கவே அந்த பெண் தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்காக அவருடைய தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை பிரித்தனர். அப்போது ரத்தக் கசிவை தற்காலிகமாக நிறுத்துவதற்காக ஆணுறை வைத்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில், சுகாதார மையத்தின் மருத்துவர் அவசரப் பணியில் இருந்தார். இதனால் வார்டு பாயிடம் மருத்துவர் பஞ்சு மேல் சில அட்டைகளை வைக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் ஆணுறை பாக்கெட்டை வைத்திருந்தார். வேறு எந்த காரணமும் இல்லை' என்று கூறினார்.
இதை தொடர்ந்து, போர்சா சுகாதார மையத்தின் வார்டு பாய் மாநில சுகாதாரத் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.