< Back
தேசிய செய்திகள்
தவறான முடிவை எடுக்கமாட்டேன்... 5 வருடத்திற்கு தேட வேண்டாம்.... குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நீட் பயிற்சி மாணவர் மாயம்
தேசிய செய்திகள்

தவறான முடிவை எடுக்கமாட்டேன்... 5 வருடத்திற்கு தேட வேண்டாம்.... குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நீட் பயிற்சி மாணவர் மாயம்

தினத்தந்தி
|
10 May 2024 12:42 PM IST

கோட்டா நகரில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் ராஜஸ்தானின் கங்காபூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மீனா என்ற 19 வயது வாலிபர் கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை அவர் எழுதினார்.

இந்த நிலையில் தேர்வு எழுதிய மறுநாள் அதாவது 6-ந்தேதி ராஜேந்திர பிரசாத் மீனா மாயமானார். விடுதி உரிமையாளரிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு ராஜேந்திர பிரசாத் மீனா அங்கிருந்து சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக அவர் தனது பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார்.

அதில், தான் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை என்றும் 5 வருடங்களுக்கு தன்னை தேட வேண்டாம் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் தன்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், தற்கொலை போன்ற எந்த தவறான முடிவையும் எடுக்க மாட்டேன் என்றும் அதில் தெரிவித்தார். இதுதொடர்பாக ராஜேந்திர பிரசாத் மீனாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்