'ஊடகங்கள் அரசின் கொள்கைகளை நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன' - பிரதமர் மோடி
|ஊடகங்கள் அரசின் கொள்கைகளை நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மும்பை,
நாட்டுக்கு வழிகாட்டுவதிலும், சூழ்நிலைகளை மாற்றியமைப்பதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என பிரதமர் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"மிகவும் முக்கியமான விவகாரங்கள் குறித்த விவாதங்களை உருவாக்குவதில் இயல்பாகவே ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஊடக உரையாடலின் போக்கு பெரும்பாலும் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பொறுத்து அமைகிறது.
அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் எப்போதும் தேர்தல் திட்டங்கள் இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த எண்ணத்தை மாற்றினோம். பா.ஜ.க. அரசின் கொள்கைகள் வாக்கு வங்கி அரசியலுக்குள் பொருந்தாது. அதே சமயம் அரசின் கொள்கைகளை ஊடகங்கள் நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவிற்கானது அல்ல என்று சில அரசியல்வாதிகள் கூறிய காலம் உண்டு. நவீன தொழில்நுட்பம் இந்த நாட்டில் வேலை செய்யாது என்ற ஒரு முன்முடிவு அவர்களுக்கு இருந்தது. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
நாட்டுக்கு வழிகாட்டுவதிலும், சூழ்நிலைகளை மாற்றியமைப்பதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு காலப் பயணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
ஊடகங்கள் இந்திய மக்களை விழிப்படையச் செய்கின்றன, அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு நினைவூட்டுகின்றன. மேலும் மக்களின் திறன்களை அவர்களுக்கு உணர்த்துகின்றன. எந்த தேசத்தில் மக்கள் தங்கள் திறன்களை உணர்ந்து கொண்டிருக்கிறார்களோ அந்த தேசம் செழிக்கும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.