துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு - மாயாவதி அறிவிப்பு
|துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது.
இதனிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், "அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அதுபோல் வரும் 6-ந் தேதி துணை ஜனாதிபதி பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுநலன் மற்றும் இயக்கத்தின் நலன் கருதி பகுஜன் சமாஜ் கட்சி துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கரை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.