நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மாயாவதி அறிவிப்பு
|எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை என மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன், 2007-ல் உ.பி.யில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம்.
அதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம். நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன.
தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். சமீபத்தில், ஆகாஷ் ஆனந்தை எனது அரசியல் வாரிசாக அறிவித்தேன். இதற்குப் பிறகு, நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என ஊடகங்களில் விவாத பொருளாக மாறின . கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.