பி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதித்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை- மாயாவதி கண்டனம்
|பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான ஐந்தாண்டு தடைக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான மாயாவதி, பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான ஐந்தாண்டு தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டசபை தேர்தல்களுக்கு முன் பி.எப்.ஐ மற்றும் அதன் எட்டு துணை அமைப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் அரசாங்கம் தடை விதித்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை. மக்கள் மத்தியில் திருப்தியை விட அமைதியின்மை அதிகமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், "இந்த தடை அரசாங்கத்தின் நோக்கங்களில் உள்ள குறைபாடு. அதனால் தான் எதிர்க்கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் தான் எதிர்க்கட்சிகள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பி.எப்.ஐ அச்சுறுத்தல் என்றால், இதுபோன்ற பிற அமைப்புகளை ஏன் தடை செய்யக்கூடாது?" என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.