துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாயாவதி வாழ்த்து
|துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.9 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்று புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பொதுநலன் மற்றும் இயக்கத்தின் நலன் கருதி கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி அவருக்கு ஆதரவளித்தது. அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.