வெடித்தது மசாஜ் விவகாரம்: சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம்
|சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் அளித்த செயலை பிசியோதெரபியுடன் ஒப்பிட்டதற்காக, மணீஷ் சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் மந்திரியாக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. கடந்த மே மாதம் 30-ந்தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது.
இதனால், அவர் வகித்து வந்த இலாகாக்கள், சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டவை துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இன்றி ஜெயின் மந்திரியாக நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது.
சத்யேந்திர ஜெயின் ஒரு மந்திரி என்றும், அதனை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்தி கொள்கிறார் என கூறியது. தவிர, டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.
இந்த நிலையில், சிறையில் ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ நேற்று ஊடகங்களில் வெளிவந்தன. சிறையில் அவருக்கு வி.ஐ.பி. சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவரை திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என, பா.ஜ.க. 2 நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வீடியோ வெளிவந்தது.
டெல்லி அரசின் கீழ் வரும் டெல்லி சிறையில், ஜெயின் படுக்கையில் படுத்தபடி, காகிதங்களை திருப்பி, வாசித்தபடி காணப்படுகிறார். அவரருகே உள்ள நபர், ஜெயின் காலுக்கு மசாஜ் செய்கிறார்.
இதுபற்றி பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஜாத் பூனாவல்லா, ஜெயினுக்கு தலை முதல் கால் வரை முழு மசாஜ் செய்யும் மற்றொரு வீடியோவை வெளியிட்டு, 5 மாதங்களாக ஜாமீன் கிடைக்காத ஒரு நபருக்கு திகார் சிறை அறையில் மசாஜ்? ஆம் ஆத்மி அரசில் சிறையில் விதிமீறல்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
எப்படி அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. கெஜ்ரிவாலுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார். 2 நாட்களுக்கு முன் கடந்த 17-ந்தேதி ரோஸ் அவென்யூ கோர்ட்டு, ஜெயினின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என மணீஷ் சிசோடியா கூறியதுடன், சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதுபற்றி இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி மந்திரி மணீஷ் சிசோடியா பிசியோதெரபியை, மற்றொரு மந்திரிக்கு மசாஜ் செய்ததுடன் ஒப்பிட்டு அதனை தரக்குறைவாக பேசியுள்ளதற்கு எங்களுடைய இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றது.
எங்களுடைய உன்னதம் வாய்ந்த தொழிலை பற்றிய அவர்களது கல்வி தரம் மற்றும் அறிவை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இது தொடர்புடைய வீடியோவில் அந்த அமைப்பின் தலைவர் பேசும்போது, மந்திரி சிசோடியா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
சமூக ஊடகத்தில் இதுபற்றிய செய்தி பரவி வருகிறது. எங்களுடைய உறுப்பினர்களிடம் இருந்தும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பிசியோதெரபி பேராசிரியராக மற்றும் இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பின் தலைவராக, சிறையில் நடந்து வரும் செயல் பிசியோதெரபி அல்ல என நாங்கள் கூற முடியும்.
அது பிசியோதெரபியை இழிவுப்படுத்தும் ஒரு வழியாகும். இந்த செயலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம். இதற்காக அந்த மந்திரி அல்லது வேறு யாராக இருப்பினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிசியோதெரபிஸ்ட் நிபுணர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள், பிசியோதெரபியை இழிவுப்படுத்த வேண்டாம் என்று செய்தி சேனல்களுக்கு தகவல் தெரிவியுங்கள். அது பிசியோதெரபி அல்ல. இதற்கு நாம் கண்டனம் தெரிவிப்போம். விசயங்களை சரி செய்யும் நோக்கில் நாம் பயணிப்போம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று திகார் சிறையின் முன்னாள் பி.ஆர்.ஓ. சுனில் குப்தா கூறும்போது, சிறையில் உள்ள பிற கைதிகள் மந்திரிக்கு மசாஜ் செய்கின்றனர் என்பது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்து உள்ளார்.