டெல்லியில் பெண்ணை வைத்து மசாஜ், ஹனி-டிராப்... மிரட்டல், கடத்தல்; காரில் இருந்து குதித்து, கூச்சலிட்ட நபரால் பரபரப்பு
|டெல்லியில் பெண்ணை வைத்து மசாஜ் என்ற பெயரில் ஹனி-டிராப் முறையில் மிரட்டி, பணம் பறிக்க முயன்ற கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று போலீசார் உடையணிந்து, பெண்ணை வைத்து மசாஜ் என்ற பெயரில் ஹனி-டிராப் முறையில் மிரட்டி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்து உள்ளது.
இதுபற்றி ஷாதரா நகர காவல் துணை ஆணையாளர் ரோகித் மீனா கூறும்போது, புகார் அளித்த நந்த கிஷோர் என்பவர் அளித்த தகவலின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியை சேர்ந்தவர். கிஷோர், இணையதளத்தில் பிரவுசிங் செய்தபோது, தற்செயலாக இந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியுள்ளார்.
அதன்பின் அவர்கள் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 29-ந்தேதி, சிக்னேச்சர் பாலம் அருகே வரும்படி கிஷோரை அழைத்து உள்ளார்.
அவர் சென்றபோது, மற்றொரு நபரை கிஷோருக்கு, மசாஜ் பெண் அறிமுகம் செய்து வைத்து, நண்பரின் வீட்டுக்கு செல்வோம் என அழைத்து சென்று உள்ளார்.
இதன்பின் அறையில் பெண்ணும், கிஷோரும் தனியாக இருந்தபோது, கதவு தட்டப்பட்டு உள்ளது. வாசலில், 4 பேர் நின்றுள்ளனர். அவர்களில் ஒருவர் குற்ற பிரிவு போலீசார் உடையிலும், ஒருவர் என்.ஜி.ஓ. அமைப்பு உறுப்பினர் போன்றும், மற்றொருவர் போலீசார் சீருடையிலும், தனவந்தர் போன்று ஒருவரும் நின்றுள்ளனர்.
அவர்கள் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தர மறுத்த கிஷோருக்கு அடி, உதை கிடைத்து உள்ளது. போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து செல்வோம் என தோரணையாக கூறியுள்ளனர்.
கிஷோரின் மொபைல் போனை பறித்து, தரவுகளை அழித்து உள்ளனர். அவரை ஒருவர் காரில் ஏற்றி சென்றுள்ளார். அதன்பின் கிஷோர் பணம் தர ஒப்பு கொண்டார். இதனால், காவல் துணை ஆய்வாளர் உடையில் இருந்த அந்த நபர் காரை நிறுத்தி உள்ளார்.
உடனே, காரில் இருந்து குதித்து, கூச்சலிட்டு நந்த கிஷோர் உதவி கேட்டு உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து காப்பாற்றி உண்மையான போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதன்பின் சன்னி சுனேஜா, முகமது சபீக், தீபக் புத்திராஜா மற்றும் ஹேமலதா என்ற மசாஜ் பெண் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 4 பேரிடம் இருந்து, கார், மொபைல் போன் மற்றும் போலீசாரின் சீருடை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.