பா.ஜனதா பெண் பிரமுகர் படுகொலை: 6 துண்டுகளாக உடலை வெட்டி பீப்பாயில் அடைத்துவைத்த கொடூரம்
|பணத்திற்கு ஆசைப்பட்டு சுசிலாம்மா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசிலாம்மா(வயது 70). இவர் பா.ஜனதா பிரமுகர் ஆவார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுசிலாம்மா பெங்களூரு நிசர்கா குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது ஒரு மகள் அதே குடியிருப்பில் இருந்தாலும், சுசிலாம்மா தனி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். அவர் தனது மகள்கள், மகன் மற்றும் குடும்பத்தார் என யாரிடமும் நெருக்கமாக இருக்கவில்லை.
சுசிலாம்மா அவ்வப்போது கட்சி கூட்டம் என வெளியே சென்றுவிடுவார். மற்ற நேரங்களில் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதும், அவற்றை குத்தகை முறையில் விடுவதுமாக இருந்து வந்துள்ளார். மேலும் சொத்து தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் சுசிலாம்மா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது மகள் அக்கம்பக்கத்தில் விசாரித்தார். எனினும் சுசிலாம்மா பற்றிய தகவல் கிடைக்கவில்லை. தேர்தல் வேலையாக தாய் வெளியே சென்று இருக்கலாம் என அவர் கருதினார்.
இந்த நிலையில் சுசிலாம்மாவின் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்று இருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அந்த பகுதியினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து வீட்டின் அருகே இருந்த பிளாஸ்டிக் பீப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது அதில் பெண் ஒருவரை கொன்று உடலை 6 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர். உடனே அந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பீப்பாயில் இருந்தது சுசிலாம்மாவின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது.
அவரை மர்மநபர்கள் கொன்று உடலை 6 துண்டுகளாக வெட்டி பீப்பாயில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. ஆனால் கொலையாளிகள் யார் என்பது முதலில் தெரியவில்லை. இது தொடர்பாக அருகே வசித்து வரும் தினேசை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது தினேசும், பா.ஜனதா பிரமுகர் ஆவார். இவர் கட்சிக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சுசிலாம்மாவுடன் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று காலையிலும் அவர் சுசிலாம்மாவுடன் வீட்டில் இருந்து பேசியுள்ளார். இதை அவரது மகள் கவனித்துள்ளார்.
தினேஷ் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு சுசிலாம்மாவின் வீட்டிற்கு தினேஷ் சென்றுள்ளார். சுசிலாம்மாவை தாக்கி கொலை செய்து அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி உள்ளார். உடல் உறுப்புகளை அங்குள்ள ஏரிப்பகுதியில் வீசுவதற்கு முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது வீட்டின் முன்பு மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது.
இதனால் இரவு முழுவதும் சுசிலாம்மாவின் வீட்டில் தினேஷ் இருந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்தால் சிக்கி கொள்வோம் என நினைத்த தினேஷ், உடல் பாகங்களை ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த பீப்பாயில் போட்டு மறைத்துள்ளார்.
பின்னர் அந்த பீப்பாயை சுசிலாம்மா வீட்டின் அருகே வைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டார். சொத்து மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு சுசிலாம்மாவை அவர் கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேசை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.