தமிழ்நாட்டில் மிஷனரிகள் மூலம் அதிக அளவில் மதமாற்றம் - ஆர்.எஸ்.எஸ். தகவல்
|மதமாற்றம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியுள்ளார்
பாலக்காடு,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் நடந்தது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முக்கியமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதமாற்றம் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் மிஷனரிகள் மூலம் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக பல அமைப்புகள் அறிக்கை அளித்து இருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரியது.
இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டது கவலையளிக்கிறது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக வங்காள தேச அரசுடன், மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.