< Back
தேசிய செய்திகள்
மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!
தேசிய செய்திகள்

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!

தினத்தந்தி
|
12 Feb 2023 7:49 AM IST

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது.

சபரிமலை.

மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி சாத்தப்பட்டது.

இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று பிற்பகலுக்குப் பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்