திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் புகார்
|நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
18வது மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
இந்தநிலையில், திரிபுரா மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலின்போது குறிப்பிட்ட 4 வாக்குச்சாவடிகளில் மொத்த வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில், 545 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியில் 574 வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும், 1,290 வாக்காளர்கள் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் 1,292 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் புகார் அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த புகாரால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட தேர்தலின் போது திரிபுராவில் 79.90 சதவீதம் வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.