சீனாவுடனான மோதலில் வீரமரணம் - வீரருக்கு அரசு நிலத்தில் சிலை; தந்தையை தாக்கி கைது செய்த போலீசார்
|சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த வீரருக்கு அரசு நிலத்தில் சிலை வைத்ததாக தந்தையை தாக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.
வைஷாலி,
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு, சீனாவின் படைகளுடன் மோதியதில் இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஜெய் கிஷோர் சிங்.
இந்நிலையில், பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஜந்தஹா நகரில் ஜெய் கிஷோர் சிங்குக்கு அவரது தந்தை சிலை ஒன்றை வைத்து உள்ளார். ஆனால், அரசு நிலத்தில் சிலை வைக்கப்பட்டு உள்ளது என புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து, ஜெய் கிஷோரின் தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுபற்றி கிஷோரின் சகோதரரான நந்த கிஷோர் கூறும்போது, டி.எஸ்.பி. மேடம் அவர்கள் வந்து, 15 நாட்களில் சிலையை நீக்க வேண்டும் என எங்களிடம் கேட்டு கொண்டனர்.
அவரிடம் சிலை வைத்ததற்கான ஆவணங்களை காட்டுவேன் என நான் கூறினேன். அதன்பின்னர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, எங்கள் வீட்டுக்கு வந்து எனது தந்தையை அடித்து, கைது செய்து அழைத்து சென்றார்.
அவர்கள், எனது தந்தையை திட்டவும் செய்தனர். நானும் ஆயுத படை அதிகாரியாக உள்ளேன் என கூறியுள்ளார். போலீசாரின் செயலுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாரத் மாதா கி ஜெய் என கோஷங்களையும் எழுப்பினர்.
எனினும், காவல் உயரதிகாரி மஹுவா கூறும்போது, ஜந்தஹா பகுதியில் ஹரிநாத் ராம் என்பவரின் நிலம் மற்றும் அரசு நிலத்தில் சிலை வைக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர் சிலையை சுற்றி சுவர்களும் எழுப்பப்பட்டு உள்ளன.
அவர்கள் அனுமதி எதுவும் பெறவில்லை. அவர்கள் விரும்பினால், அவர்களுடைய சொந்த நிலத்தில் சிலையை வைக்கட்டும். அல்லது அரசிடம் நிலம் கேட்டு பெற வேண்டும். இதில், எந்த விவகாரமும் ஏற்பட கூடாது. இவர்களின், சட்டவிரோத ஆக்கிரமிப்பு செயலால், நில உரிமையாளர்களின் உரிமைகள் மீறப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.