'திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது, நான் கோபப்பட மாட்டேன்'... காங்கிரஸ் தலைவருக்கு பதிலளித்த சபாநாயகர்
|பிரதமரை நான் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் ஜகதீப் தன்கர் கூறினார்.
புதுடெல்லி,
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விதி எண் 267-ன் கீழ் விரிவான விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விதி எண் 167-ன் கீழ் குறிப்பிட்ட கால அளவில் விவாதம் நடத்த அனுமதி அளிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. அந்த வகையில் இன்று மாநிலங்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சபாநாயகர் ஜகதீப் தன்கர் இடையே நடந்த சுவாரஸ்யமான விவாதம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடத்த நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதற்கான காரணத்தை நாங்கள் கூறிய போதும் நீங்கள் அதை ஏற்கவில்லை. நேற்று இது தொடர்பாக உங்களிடம் கோரிக்கை வைத்த போது, நீங்கள் கோபமாக இருந்தீர்கள்" என்று கூறினார்.
இதைக் கேட்டு சிரித்தபடி சபாநாயகர் ஜகதீப் தன்கர், "எனக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. நான் எப்போதும் கோபப்பட மாட்டேன்" என்றார். அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, "வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் நீங்கள் கோபமாகவே இருக்கிறீர்கள்" என்றார். இந்த உரையாடலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் சபையில் உரையாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால் நீங்கள் அதை ஏற்கவில்லை. நீங்கள் பிரதமரை பாதுகாக்கிறீர்கள்" என்றார்.
இதற்கு பதிலளித்த ஜகதீப் தன்கர், "நாம் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு தேசமாக இருக்கிறோம். உலகிலேயே கிராம அளவில் அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் கொண்ட ஒரே நாடு இந்தியா தான். நமது பிரதமரை நான் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டவர். இதைப் பற்றி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்" என்று கூறினார்.