வேறொரு நபருடன் திருமணம்; இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பலாத்கார குற்றவாளி: வைரலான வீடியோ
|சலீம் கான், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி வந்திருக்கிறார்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் அசோக் நகர் பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வாள், இரும்பு தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. இதில், காலு என்ற சலீம் கான் என்ற நபர் அந்த இளம்பெண்ணுக்கு முன்பே அறிமுகம் ஆனவர் என கூறப்படுகிறது.
கூட்டாளிகள் ஜோதா, சமீர் மற்றும் ஷாருக் ஆகியோருடன் இளம்பெண்ணின் வீட்டுக்குள் சலீம் புகுந்துள்ளார். அவர்கள் அந்த இளம்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது அவர்களை, தடுக்க முயன்ற பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரை கை, கால் பகுதிகளில் கூட்டாளிகள் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பெண்ணை திருமணம் செய்ய இருந்த மணமகனின் வீட்டாரையும் தொலைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். அந்த இளம்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்ததும், அவர் சத்தம் போட்டு கத்திய நிலையில், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டனர்.
உடனே சலீம், ஆயுதங்களை காட்டி கூடியிருந்தவர்களை முதலில் மிரட்டியுள்ளார். ஆனால், கூட்டம் அதிக அளவில் சேர தொடங்கியதும் பெண்ணை விட்டு, விட்டு தப்பி சென்றார். இதனால், அந்த கும்பலும் ஆயுதங்களுடன் பைக்கில் ஏறி தப்பியது.
இந்த சம்பவத்திற்கு முன் அந்த இளம்பெண்ணை, சலீம் கான் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டியிருக்கிறார். அந்த பெண் மற்றும் குடும்பத்தினருக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அந்த வீடியோவை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று அந்த பெண்ணுக்கு மிரட்டலும் விடப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று நேற்று வைரலானது. இந்த சம்பவத்திற்கு எதிராக முதலில் வழக்கு பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டியுள்ளனர்.
இதன்பின்னர், அந்த இளம்பெண் மற்றும் அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். சலீம் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.