காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபர்
|பெங்களூரு அருகே ஒருதலை காதலால் இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை வாலிபர் தடுத்து நிறுத்தினார். அவரை உறவினர்கள் கொடூரமாக தாக்கியதால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு அருகே ஒருதலை காதலால் இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை வாலிபர் தடுத்து நிறுத்தினார். அவரை உறவினர்கள் கொடூரமாக தாக்கியதால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
இளம்பெண்ணுக்கு திருமணம்
பெங்களூரு நகரில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணுக்கும், வாலிபருக்கும் இருவீட்டு பெற்றோரும் பேசி திருமணம் முடிவு செய்திருந்தார்கள். அதன்படி, இளம்பெண்ணுக்கும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபருக்கும் நேற்று காலையில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தூபகெரேயில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், நேற்று காலையில் முகூர்த்த நேரத்திற்கு முன்பாக பெங்களூருவை சேர்ந்த நிதிஷ் என்ற வாலிபர் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவர், இளம்பெண்ணும், தானும் காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அங்கிருந்தவர்களிடம் காட்டினார். தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் நிதிஷ் கூறினார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் மீது கொடூர தாக்குதல்
ஆனால் அந்த இளம்பெண் நிதிசை காதலிக்கவில்லை என்று உறுதியாக கூறினார். தான் நட்பாக தான் பேசியதாகவும் தெரிவித்தார். உடனே ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நிதிசை பிடித்து அடித்து, உதைத்து தாக்கினார்கள்.
அப்போது அவர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நிதிசை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது நிதிசும், இளம்பெண்ணும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளனர். அதன்பிறகு 2 பேருக்கும் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.
வாட்ஸ்-அப் குழு
சமீபத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்று சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஆரம்பித்துள்ளனர். அதில், நிதிசும், இளம்பெண்ணும் சேர்ந்துள்ளனர். இதனால் இளம்பெண்ணிடம் நிதிஷ் பேசியுள்ளார். தன்னுடன் ஒன்றாக படித்தவர் என்பதால் நிதிசுடன் இளம்பெண்ணும் பேசி இருக்கிறார். ஆனால் இளம்பெண்ணை நிதிஷ் ஒருதலையாக காதலித்திருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்தனர். இதுபற்றி அறிந்த நிதிஷ் திருமண மண்டபத்திற்கு வந்து தகராறு செய்தது தெரியவந்தது. இந்த பிரச்சினையால் இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.