மராட்டியம்: கல்லூரி மாணவி கடத்தி கொலை; சக மாணவர் உள்பட 3 பேர் கைது
|கல்லூரி மாணவியின் பெற்றோரிடம் சக மாணவர் உள்பட 3 பேரும் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
புனே,
மராட்டியத்தின் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவருடைய கல்லூரி மற்றும் விடுதிக்கு வந்து பெற்றோர் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதன்பின் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மாணவியை பணம் கேட்டு சக மாணவர் உள்பட 3 பேர் கடத்திய விவரம் தெரிய வந்தது. ஆனால், அவரை அந்த கும்பல் தாக்கி கொலை செய்துள்ளது. அவருடைய உடல் அகமதுநகரில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 29-ந்தேதி சக மாணவர் உள்பட 3 பேர் அவரை விடுதியில் விட்டு சென்றனர். அடுத்த நாள் மீண்டும் அவரை வணிக வளாகத்திற்கு வரும்படி சக மாணவர் அழைத்துள்ளார்.
இதன்பின், வீட்டில் விடுகிறோம் என கூறி காரில் அழைத்து சென்றார். காரில் வேறு 2 பேர் இருந்தனர். புனே நகருக்கு வெளியே கார் சென்றது. மாணவியை அழைத்து கொண்டு அகமதுநகருக்கு சென்றனர். இதன்பின்னர், மாணவியின் பெற்றோரிடம் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்பு, மாணவியை கழுத்து நெரித்து கொலை செய்து, உடலை புதைத்து விட்டு தப்பினர். மாணவியின் செல்போனில் இருந்த சிம் கார்டையும் கழற்றி வீசினர்.
இதுபற்றி புனே நகர கிழக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் மனோஜ் பாட்டீல் கூறும்போது, இந்த வழக்கில் சக மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் கேட்டு மிரட்டினர். பின்னர், மாணவியை கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.