மராட்டியம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி; அதிர்ச்சி காரணம் வெளியீடு
|மராட்டியத்தில் வீட்டில் இருந்தபோது, ஏற்பட்ட துரதிர்ஷ்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேரும் உயிரிழந்த சோக சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது.
புனே,
மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சுனில் பெலிராவ் (வயது 44). இவருடைய மனைவி அதிகா பெலிராவ் (வயது 37). இந்த தம்பதியின் மகன் பரசுராம் (வயது 18).
இந்நிலையில், கொடியில் காய்வதற்காக போட்டிருந்த துணியை எடுக்க சென்றபோது, அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து இவர்கள் 3 பேரும் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுனிலின் வீடு அருகே இருந்த மற்றொரு வீட்டிற்கு, மின் இணைப்பு வழங்குவதற்கான கேபிள் கம்பி ஒன்று, சுனிலின் வீட்டின் மீது விழுந்து கிடந்துள்ளது. இந்த கேபிளை ஆதரவாக பிடித்திருந்த இரும்பு தடி ஒன்று வளைந்து இருந்துள்ளது. இதனால், அதில் இருந்து மின்சாரம் வெளியேறி சுனிலின் வீட்டின் தகர கூரை மீது பாய்ந்துள்ளது.
அந்த தகர கூரைக்கு அருகே உலோக வயர் ஒன்றில் சுனில் குடும்பத்தினர் துணிகளை காய போட்டிருந்துள்ளனர். இதனால், அந்த உலோக கம்பியிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில், இது எதுவும் தெரியாமல் துணிகளை எடுப்பதற்காக சுனில் சென்றுள்ளார்.
அப்போது, சுனில் மீது மின்சாரம் தாக்கி இருக்கிறது. இதனை கவனித்த பரசுராம், தந்தையை காப்பாற்ற ஓடியுள்ளார். ஆனால், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இவர்களை கவனித்த ஆதிகா, குடும்பத்தினரை பாதுகாக்க முயற்சித்து உள்ளார். ஆனால், அவரும் மின்சாரம் தாக்குதலுக்கு ஆளானார். இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில் 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி யவத் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் நாராயண் தேஷ்முக் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த விசயத்தில், தற்செயலாக நடந்த மரணம் என வழக்கு பதிவு செய்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.