< Back
தேசிய செய்திகள்
மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகள் கொள்ளை
தேசிய செய்திகள்

மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகள் கொள்ளை

தினத்தந்தி
|
18 Jun 2023 2:17 AM IST

ஹாவேரி அருகே மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

லாரியில் பிணம்

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாக ஒரு லாரி கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிலர் லாரி அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அதில் டிரைவர் இருக்கையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் பற்றி ஹாவேரி சாகர் போலீசில் புகார் அளித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லாரி, மராட்டிய வாகன பதிவு எண் பொருத்தப்பட்டு இருந்தது. அதன் மூலம் போலீசார் கொலையானவர் பற்றி துப்பு துலக்கினர்.

மராட்டிய டிரைவரை கொன்று கொள்ளை

இதில் கொலையானவர் மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த நாராயண் காண்டேகர் (வயது 40) என்பதும், லாரியில் சாங்கிலி மாவட்டம் மீரஜ் நகரை சேர்ந்த போஸ்லே என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

மேலும் கோவிந்த நாராயண் காண்டேகர் போஸ்லேவின் லாரிக்கு டிரைவராக பணியாற்றி வந்ததும், மீரஜில் இருந்து சென்னைக்கு 15 டன் இரும்பு கம்பிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டதும், வரும் வழியில் அவரை கொள்ளையர்கள் வழிமறித்து, இரும்பு கம்பிகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனால் அவர் கொள்ளையை தடுக்க முயன்றுள்ளார். இதில் மர்மநபர்கள் அவரை கொலை செய்ததும், பின்னர் லாரியில் இருந்த 15 டன் இரும்பு கம்பிகளையும் மற்றொரு லாரியில் ஏற்றி கொள்ளையடித்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும், வாகன ஓட்டிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்