மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்: 18 பேர் மந்திரிகளாக பதவியேற்பு; பட்டியல் வெளியீடு
|மராட்டிய மந்திரி சபை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
புனே,
மராட்டியத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து, மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றனர். அவர்கள், மகா விகாஸ் அகாடி தலைமையிலான கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.
இந்த சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடம் கொடுக்காமல், முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதனை அடுத்து, பா.ஜ.க. கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைத்தனர்.
இதனை தொடர்ந்து, முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார். கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய பா.ஜ.க.வின், முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராட்டியத்தின் துணை முதல்-மந்திரியானார்.
மராட்டியத்தில் புதிய அரசு அமைந்தபோதிலும், மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறாமல் இருந்தது. இதுபற்றி பரவலாக பேசப்பட்ட நிலையில், 5 வாரங்களுக்கு பின்னர் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர். அவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளிவந்து உள்ளது. இதன்படி பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேர், சிவசேனாவை சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.
அவர்களில் பா.ஜ.க.வை சேர்ந்த மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதீர் முங்கந்திவார், சுரேஷ் காடே, கிரீஷ் மகாஜன், ரவீந்திர சவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் கவித் மற்றும் அதுல் சவே ஆகியோர் மந்திரி சபையில் இடம் பெறுகின்றனர்.
இதேபோன்று சிவசேனாவை சேர்ந்த தாதா பூசே, ஷம்புராஜே தேசாய், சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சஞ்சய் ரதாவுட் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.
இதனை முன்னிட்டு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சாயாத்ரி விருந்தினர் இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.