< Back
தேசிய செய்திகள்
மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு
தேசிய செய்திகள்

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

தினத்தந்தி
|
24 Sept 2024 9:59 PM IST

தண்ணீர் மற்றும் மருந்துகள் எதையும் சாப்பிடாமல் ஜரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

அவரது கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டின் துவக்கத்தில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதம் 17 நாட்கள் நீடித்தது.

மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாய குன்பி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் இருந்தால், அந்த நபரின் ரத்த சொந்தங்கள் அனைவருக்கும் குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

எனினும், குன்பி சாதிச் சான்றிதழ்களை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கும் பணியை அரசு தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவ்வப்போது போராடி வருகிறார்.

அவ்வகையில், ஜரங்கே தனது கோரிக்கையை வலியுறுத்தி அவரது சொந்த ஊரான அந்தர்வாலி சராதி கிராமத்தில் கடந்த 17-ம் தேதி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது போராட்டம் இன்று 8-வது நாளை எட்டியது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் நீர்ச்சத்து குறைந்து அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும், இதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை வலியுறுத்தினர். ஆனால் அவர் தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார். எனினும் ஒரு மருத்துவக் குழு அங்கு தயார் நிலையில் உள்ளது.

மராட்டிய அரசு மராத்தா சமூகத்திற்கு வேண்டுமென்றே இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், குன்பி மக்களை மராத்தா சமூகத்தினரின் ரத்த உறவுகள் என்று அங்கீகரிக்கும் வரைவு அறிவிப்பை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்