< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் மாவோயிஸ்டு கைது
தேசிய செய்திகள்

கேரளாவில் மாவோயிஸ்டு கைது

தினத்தந்தி
|
19 July 2024 3:10 AM IST

கொச்சி நகருக்கு மாவோயிஸ்டு ஒருவர் வந்துள்ளதாக எர்ணாகுளம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு, கண்ணூர் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் குடியிருப்பு பகுதியில் அவ்வப்போது நுழைந்து பொதுமக்களிடம் இருந்து அத்தியாவசிய பொருட்களை பறித்து செல்கின்றனர். தகவல் அறிந்து சென்ற கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து உள்ளது.

வயநாடு வனப்பகுதியில் போலீசார் ரோந்து செல்லும் வழியில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு கண்டறியப்பட்டது. சமீபத்தில் மாவோயிஸ்டுகள் தங்களது உடைமைகளை குடியிருப்பு பகுதியில் வீசி விட்டு சென்றனர். இதனால் தண்டர்போல்ட் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மாவோயிஸ்டு அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக கொச்சி நகருக்கு மாவோயிஸ்டு ஒருவர் வந்துள்ளதாக எர்ணாகுளம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் தண்டர்போல்ட் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையம் பகுதியில் நின்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவை சேர்ந்த மனோஜ் (வயது 36) என்பதும், மாவோயிஸ்டு அமைப்பில் முக்கிய புள்ளியாக இருந்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மனோஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்