ஆ.ராசா பேசியதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? - அனுராக் தாக்கூர் கேள்வி
|காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து சனாதன தர்மத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை, இது ஒரு துணைக் கண்டம், என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். ராசாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து சனாதன தர்மம், இந்து மதம், கடவுள் ராமரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன. மறுபுறம் நாட்டை பிரிக்க நினைக்கும் கும்பல்களுடன் அவர்கள் சேர்ந்து செயல்படுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பி அந்நாட்டின் வெற்றியை கொண்டாடுகின்றனர்.
தற்போது பெரிய ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட நபர், அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டார். காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் அவர், இந்தியா, சனாதன தர்மம், கடவுள் ராமருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரை பாதுகாப்பது யார் என்ற கேள்வியை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்?
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தையும் அக்கட்சி ஏற்கிறதா? இந்தியாவை நாடாக காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்வது ஏன்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.