< Back
தேசிய செய்திகள்
இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு: நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தம் - மத்திய சுகாதார மந்திரி
தேசிய செய்திகள்

இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு: நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தம் - மத்திய சுகாதார மந்திரி

தினத்தந்தி
|
30 Dec 2022 4:52 PM GMT

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தை குடித்த பல குழந்தைகள் இறந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நொய்டாவில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்தார்.

18 குழந்தைகள் சாவு

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் இறந்தன. இது தொடர்பான விசாரணையில், இந்தியாவில் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மரியோன் பயோடெக் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த 'டாக்-1 மேக்ஸ்' என்ற இருமல் மருந்தை டாக்டர்களின் பரிந்துரை இன்றி மருந்து கடைகளில் வாங்கி, அக்குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுத்ததும், அந்த மருந்தில், எத்திலின் கிளைகோல் என்ற வேதிப்பொருள் இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் இந்திய மருந்து மீது குற்றம் சாட்டியது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு உடனடியாக விசாரணையை தொடங்கியது. அந்த அமைப்பின் அதிகாரிகள் நொய்டாவில் உள்ள மரியோன் பயோடெக் மருந்து நிறுவனத்துக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.

உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தம்

இதுகுறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில், "இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு குழுவினர் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இருமல் மருந்து டாக் 1 மேக்சில் மாசு இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், நொய்டாவில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நேற்று இரவு நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் மருந்து நிறுவனத்தின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

அதேபோல் உஸ்பெகிஸ்தான் அதிகாரிகளுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்களின் விசாரணையின் விவரங்களை கேட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இதனிடையே மரியான் பயோடெக் 'டாக்-1 மேக்ஸ்' மருந்தை இந்தியாவில் விற்பதில்லை என்றும், உஸ்பெகிஸ்தானுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதாகவும் உத்தரபிரதேச அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்