யு.பி.எஸ்.சி. தலைவராக மனோஜ் சோனி பதவி ஏற்பு
|யு.பி.எஸ்.சி. தலைவராக மனோஜ் சோனி பதவி ஏற்றார்.
புதுடெல்லி,
மத்திய பணியாளர் தேர்வாணையக்குழு யு.பி.எஸ்.சி.யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி.யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்ந்தார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற அதிகாரிகளை யு.பி.எஸ்.சி. தான் தேர்வு செய்கிறது.
யு.பி.எஸ்.சி.யில் ஒரு தலைவரும், 10 உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கலாம். தற்போது அதில் 5 உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.
மனோஜ் சோனி கடந்த 2017-ல் யு.பி.எஸ்.சி.யின் உறுப்பினர் ஆனார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முதல் யு.பி.எஸ்.சி.யின் தலைவர் பொறுப்பினை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குஜராத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருமுறையும், பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஒரு முறையும் வகித்துள்ளார்.