< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிட மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிட மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
1 Sept 2022 4:52 AM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளிப்படையாக வெளியிடுமாறு மணீஷ் திவாரி, சசிதரூர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை தொடர்ந்து, சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவை சேர்ந்த சசிதரூர், இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறார். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், இக்குழுவில் உள்ள மற்றொரு எம்.பி.யான மணீஷ் திவாரி, இதே கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியல் வெளியிடப்படாது என்று காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். யாராவது வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்பினால், மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், யாராவது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிடாமல் எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்? ஒருவேளை யாராவது போட்டியிட விரும்பினால், வேட்புமனுவை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். கடைசியில், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, வாக்களிப்பவர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பட்டியலை பார்ப்பதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு ஏன் செல்ல வேண்டும்? என்று அவர் கூறியுள்ளார்.

அவரது கருத்துக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

யார் யார் வாக்களிப்பார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு தேர்தலுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.

சீர்திருத்தவாதிகளை கிளர்ச்சி செய்பவர்களாக பார்க்கக்கூடாது. கட்சியை சீர்திருத்த விரும்பும் ஒவ்வொருவரும் ராஜினாமா செய்ய வேண்டுமா? அப்படியானால் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள்தான் கட்சியில் இருக்க வேண்டுமா? என்று அவர் கூறியுள்ளார்.

மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு

ஆனால், ஆட்சேபனை தெரிவிப்பவர்களை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நான் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவரின் வேட்புமனுவை ஏதேனும் 10 மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் முன்மொழிந்தால் போதும்.

தேர்தல் நடைமுறை குறித்து என் சகாக்கள் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? வெளிப்படையான முறையை கொண்டுள்ள நாம் பெருமைப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்