மதுபான கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
|மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மணீஷ் சிசோடியா வேறு நபர்களின் பெயரில் சிம் கார்டுகள், செல்போன்கள் வாங்கியுள்ளதாகவும் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
அதுபோல, 10 நாள் காவலில் விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு மீதான விசாரணையில் மார்ச் 17 வரை மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.