டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்
|டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபானக்கொள்கை 2021-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் பற்றிய ரகசிய தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டு, அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள், விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாகவும், இதற்கு பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இந்த ஊழலில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஊழலில், மதுபானக்கொள்கையை வகுத்த கலால் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற வகையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவின் பெயரும் பலமாக அடிபட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 17-ந் தேதி அவரிடம் சி.பி.ஐ. விசாரணையும் நடத்தியது.
தொடர்ந்து டிசம்பர் மாதம் டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நுழைந்து அங்கும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆம் ஆத்மி கட்சி கூறி, குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்த ஊழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் பெயரும் அடிபட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது முன்னாள் ஆடிட்டர் புட்சிபாபு கோரண்ட்லா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மணிஷ் சிசோடியாவிடம் கடந்த 19-ந் தேதி மீண்டும் நேரடி விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவகாசம் கோரினார். ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர் நேற்று நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியது.
அதன்பேரில் அவர் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ள டெல்லி லோதி சாலையில் அமைந்துள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை சுமார் 11 மணிக்கு திறந்த வாகனத்தில் வந்தார்.
சி.பி.ஐ. நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ. அலுவலகம் அருகே கண்டன போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சித்தலைவர்களான சஞ்சய் சிங் எம்.பி., டெல்லி மந்திரி கோபால் ராய் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். தெற்கு டெல்லி மாவட்டம் முழுவதும் போலீஸ் தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என்ற ஊகங்களும் பலமாக அடிபட்டது.
இதனைத்தொடர்ந்து மணிஷ் சிசோடியாவிடம் மதுபானக் கொள்கையின் அம்சங்கள, மதுபான வியாபாரிகளுடனான அவரது தொடர்பு மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கேள்வித்தாள்படி துருவித்துருவி கேள்விகள் கேட்டு, பதில்களைப் பெற்று பதிவு செய்தனர். இந்த விசாரணை 8 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
விசாரணை முடிவில் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.