மணிப்பூர் வன்முறை வீடியோ: இது தான் 21-ம் நூற்றாண்டின் இந்தியாவா? - ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா கண்டனம்
|பிரதமர் கூறும் புதிய இந்தியா இது தானா? என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் மணிப்பூரில் கடந்த மே மாதம் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"மணிப்பூரிலிருந்து வரும் மிருகத்தனமான, அரக்கத்தனமான வீடியோக்கள் இந்தியாவின் ஆன்மாவை உலுக்கியுள்ளன. இது தான் 21-ம் நூற்றாண்டின் இந்தியாவா? பிரதமர் கூறும் புதிய இந்தியா இது தானா? இதற்குத் தான் மணிப்பூர் மக்கள் வாக்களித்தார்களா?" என்று ராகவ் சத்தா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.