காதலை பிரித்த மணிப்பூர் வன்முறை... குகி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
|மெய்தி கணவரின் மனைவி குகி பெண் என தெரிந்ததும் மணிப்பூர் நிவாரண முகாமில் இருந்து கட்டாயமாக வெளியேற்றிய சோக சம்பவம் நடந்துள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது.
இந்த வன்முறையை தொடர்ந்து, வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அடித்து, நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.
கலவரத்தில், பெண்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்தனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்று அவர்களுக்கு அவமதிப்பும் நடந்தது.
இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. இந்த நிலையில், மெய்தி சமூகத்தினரை, பாதுகாப்புக்காக மீட்டு, அழைத்து சென்று இம்பாலில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இதில், ஒரு ஜோடி கலப்பு திருமணம் செய்துள்ளது. அவர்களில் கணவர் மெய்தி சமூக நபர். அவரது மனைவி குகி சமூக பெண். இதனை அறிந்த முகாமில் இருந்தவர்கள், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்.
கோகிரிசாங் என்ற அந்த இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒரு மாதம் வரை கணவருடன் எந்த தொடர்பும் இல்லை. அவரிடம் பேசவும் இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச்-ஆப் என வந்தது. அவருடைய நிலைமை என்னவென தெரியவில்லை.
மெய்தி சமூக நபரை திருமணம் செய்த பின்னர், என்னையும் மெய்தி நபராகவே அடையாளம் காண்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், என்னுடைய ஆதார் அட்டையை பார்த்த முகாமில் இருந்தவர்கள், அதில் உள்ள பெயரின்படி, நான் குகி சமூக பெண் என்றும், மெய்தி பெண் இல்லை என்றும் கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டனர்.
எனது குழந்தை, அதன் தந்தையையும் மற்றும் தாத்தா-பாட்டியையும் பார்ப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், உறுதி செய்ய வேண்டும். எனது கணவருக்கும், உறவினர்களுக்கும் நான் உயிருடனே இருக்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மணிப்பூரில் வன்முறை பரவி 2 மாதங்கள் ஆன நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்பாமல் பொதுமக்கள் பதற்றத்துடனேயே வாழ்கின்றனர்.