மணிப்பூர் வன்முறை; வழிபாட்டுத் தளங்களை மறுசீரமைக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
|சேதமடைந்த வழிபாட்டுத் தளங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மணிப்பூர் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கு சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவப் படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
தொடர்ந்து ஊரடங்கு, இணையதள முடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசு முயற்சித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மணிப்பூரில் கலவரத்தின்போது சேதமடைந்த மத வழிபாட்டுத் தளங்களை மறுசீரமைக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மணிப்பூரில் கலவரத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தளங்களை கண்டறிந்து, அவற்றை மறுசீரமைக்கும் பணியை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி தெரிவித்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மணிப்பூர் கலவரத்தில் சேதமடைந்ததாக கண்டறியப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் குறித்த விரிவான அறிக்கையை அடுத்த 2 வாரங்களுக்குள் மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த அறிக்கை அனைத்து மத வழிபாட்டுத் தளங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.