
மணிப்பூர் வன்முறை: 7,500 மக்களை வெளியேற்ற முடிவு; முதல்-மந்திரியுடன் அமித்ஷா பேச்சு

மணிப்பூர் வன்முறை நிலவரம் பற்றி முதல்-மந்திரியுடன் மத்திய மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே பேசியுள்ளார்.
இம்பால்,
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெருமளவில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூரில் மெய்தெய் என்ற சமூகம் உள்ளது. தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனினும், இதற்கு மற்றொரு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பிலான ஒற்றுமை பேரணி என்ற பெயரில் ஊர்வலம் நடத்த முடிவானது.
இதன்படி, பழங்குடி மாணவர் சங்கத்தினர் நேற்று ஊர்வலம் சென்றபோது, திடீரென வன்முறை பரவியது. வீடுகள், குடியிருப்புகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம் வெடித்தது. சாலையில் வழிநெடுகிலும் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இந்த வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்கள் என 7,500 பேரை பாதுகாப்பாக இரவில் இருந்து வெளியேற்றும் பணி தொடர்ந்து வருகிறது.
இதுபற்றி மத்திய மந்திரி அமித்ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். மணிப்பூர் நிலைமை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பற்றி கேட்டறிந்து உள்ளார்.
நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தி உள்ளது.
அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.