< Back
தேசிய செய்திகள்
மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்
தேசிய செய்திகள்

மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்

தினத்தந்தி
|
19 Aug 2023 2:20 PM IST

மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பத் தொடங்கியது.

இந்த நிலையில் 2 வாரத்திற்கு பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. நேற்று உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

காங்போக்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்திவருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

சுதந்திர தினத்தன்று மணிப்பூர் முதலமைச்சர் பேசும்போது வன்முறை தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். மன்னிப்போம் மறப்போம் என்று கூறிய அவர், முன்பு போல் அமைதியாக வாழவேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் பேசி இரண்டு நாட்களுக்குப் பிறகு, 3 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் குமுறுகின்றனர்.

மணிப்பூர் விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மாநிலத்தில் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மலை மாவட்டங்களை போல மணிப்பூரின் அனைத்து பள்ளத்தாக்கு மாவட்டங்களிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு பழங்குடியினர் ஒற்றுமை குழு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

"மத்திய அரசாங்கத்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியாவிட்டால், 355வது சட்டப்பிரிவை அமல்படுத்தலாமே? சமீபத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த சட்டத்தை நீக்கியதும் நேற்றைய கொலைக்கு ஒரு காரணம்" என பழங்குடியின ஒற்றுமை குழு ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

மோதல்கள் நிறைந்த பகுதிகளில் ராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். இந்த சட்ட வரம்பில் இருந்து 19 காவல் நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 19 காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு படையினர் செயல்படுவது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பு கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்