< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர்:  ஊரடங்கை மீறி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு; பலர் காயம்
தேசிய செய்திகள்

மணிப்பூர்: ஊரடங்கை மீறி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு; பலர் காயம்

தினத்தந்தி
|
6 Sep 2023 11:46 AM GMT

மணிப்பூரில் ஊரடங்கை மீறி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் புல்லட்டுகளை கொண்டு துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயமடைந்தனர்.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே 3-ந்தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இதன்பின்னர், ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. மணிப்பூரின் பிஷ்ணூபூர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கு முன்பு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, காலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தளர்வு அமலில் இருந்தது.

இந்நிலையில், இந்த 5 மாவட்டங்களில் நேற்று மாலை ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பிஷ்ணூபூர் மாவட்டத்தில் பவுகக்சாவோ பகுதியை நோக்கி இன்று நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியபடி சென்றனர்.

அவர்கள் தோர்பங் பகுதியில் உள்ள தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முயன்றனர். இந்த பகுதியில் இருந்தே, கலவரம் ஏற்பட்டதும் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், தடுப்புக்காக ராணுவத்தின் தடுப்பான்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவற்றை உடைத்து, முன்னேறி செல்ல அவர்கள் முற்பட்டனர்.

இதனால், அவர்களை கட்டுப்படுத்த அதிரடி விரைவு படை, அசாம் ரைபிள் படை மற்றும் மணிப்பூர் போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டனர்.

ஊரடங்கை மீறி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் புல்லட்டுகளை கொண்டு துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இதன்பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் செய்திகள்