< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் பஸ் விபத்து; மாணவிகள் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு: ஜனாதிபதி இரங்கல்
தேசிய செய்திகள்

மணிப்பூர் பஸ் விபத்து; மாணவிகள் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு: ஜனாதிபதி இரங்கல்

தினத்தந்தி
|
21 Dec 2022 10:34 PM IST

மணிப்பூர் பஸ் விபத்தில் மாணவிகள் 9 பேர் பலியான நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து உள்ளார்.



நானி,


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு 2 பஸ்கள் கல்வி சுற்றுலாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளன.

இந்த நிலையில் மாணவிகள் பயணித்த ஒரு பஸ், மணிப்பூரின் நானி மாவட்டத்தில் கோபும் என்ற பகுதியில் பழைய கச்சார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பள்ளி மாணவிகள் சிக்கி கொண்டனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, மலை மாவட்டத்தில் லாங்சாய் பகுதியருகே மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் பஸ் விபத்தில் சிக்கியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் மாணவிகள் பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த விபத்தில் முதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. முதல்-மந்திரி பைரன் சிங் இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அவர், மாநில பேரிடர் பொறுப்பு படை, மருத்துவ குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிக்கு உதவி வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

விபத்து பற்றி ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், விலைமதிப்பற்ற இளம் வயதினரின் இழப்பு மனவருத்தம் அளிக்கிறது. துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்