< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் கொடூரம்: நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்
தேசிய செய்திகள்

மணிப்பூர் கொடூரம்: நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

தினத்தந்தி
|
26 July 2023 9:54 AM IST

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.

புதுடெல்லி,

மணிப்பூரில் 160-க்கு மேற்பட்டோரை பலி வாங்கிய கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி நாட்டையே உலுக்கி வருகிறது. இதில் முக்கியமாக 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு சென்ற வீடியோ பதிவுகள் மக்களை பதற வைத்துள்ளன.

மணிப்பூர் விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை கேட்டும், இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரியும் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும் அசாம் முன்னாள் முதல்-மந்திரியுமான தருண் கோகோயின் மகனுமான கவுரம் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.

மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, பிரதமரை பேச வைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்