மணிப்பூரில் ராணுவத்தின் அதிரடி வேட்டைக்குப்பின் அமைதி திரும்பியது
|மணிப்பூரில் ராணுவத்தின் அதிரடி வேட்டைக்குப்பின் அமைதி திரும்பியது. இருந்தபோதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த 3-ந்தேதி முதல் நடந்து வரும் கலவரத்தில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் இணைந்து வீடுகளுக்கு தீ வைப்பு, பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற சதி செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த, பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அதிரடி வேட்டையை தொடங்கினர். நாள் முழுவதும் நடந்த தாக்குதல்களில் சுமார் 40 பயங்கரவாதிகள் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடியால் நேற்று மாநிலத்தில் அமைதி திரும்பியது. அதேநேரம் இம்பாலின் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை நேற்றும் நீடித்தது.
இதன் பலனாக ஏராளமான சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சன்சாபி, குவால்டாபி, இம்பால் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வேட்டையில் சுமார் 25 பேரை ராணுவம் சுற்றி வளைத்து கைது செய்தது. அவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர்கள் மாநில போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து விட்டது.