< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர்:  இயல்பு நிலை திரும்ப கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைக்கு அமித்ஷா உத்தரவு
தேசிய செய்திகள்

மணிப்பூர்: இயல்பு நிலை திரும்ப கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைக்கு அமித்ஷா உத்தரவு

தினத்தந்தி
|
31 May 2023 11:05 PM IST

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப கடுமையான நடவடிக்கை எடுங்கள் என பாதுகாப்பு படைக்கு மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் அவர்கள் கும்பலாக பேரணி நடத்தினர். இதற்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.

இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. இந்த நிலையில், வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே கேட்டறிந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.

இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பை இன்று நடத்தினார்.

இதில், மணிப்பூரின் அமைதி மற்றும் வளம் நம்முடைய முக்கிய முன்னுரிமையான விசயம் என அவர் கூறினார். மாநில அமைதியை குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த ஞாயிறன்று, ஒரு காவல் உயரதிகாரி உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு சூறையாடப்பட்டது. ரைபிள் படை பிரிவின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயிரம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தன.

மேலும் செய்திகள்