திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா இன்று பதவியேற்பு
|திரிபுராவின் முதல்-மந்திரியாக 2வது முறையாக மாணிக் சகா இன்று பதவியேற்க உள்ளார்
அகர்தலா,
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்றது. 32 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இதனிடையே, கடந்த முறை திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு பாஜக மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியுமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகின. இதனால், தேர்தலில் வெற்றிபெற்றபோதும் முதல்-மந்திரி யார்? என்பதில் திரிபுரா பாஜகவில் குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து, பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர். இந்நிலையில், பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் திரிபுராவின் முதல்-மந்திரியாக 2வது முறையாக மாணிக் சகா இன்று பதவியேற்க உள்ளார். அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மாணிக் சகா திரிபுராவின் முதல்-மந்திரியாக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.