லால்பாக்கில் மாம்பழ கண்காட்சி தொடங்கியது
|பெங்களூரு லால்பாக்கில் நேற்று மாம்பழ கண்காட்சி தொடங்கியது.
பெங்களூரு:
பெங்களூரு லால்பாக்கில் நேற்று மாம்பழ கண்காட்சி தொடங்கியது.
ஆண்டுதோறும்...
பெங்களூரு சாந்திநகர் பகுதியில் லால்பாக் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் மாம்பழ மற்றும் பலாப்பழ கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாம்பழ கண்காட்சி மே மாதம் நடைபெற இருந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் காரணமாக கண்காட்சி தொடங்கும் தேதியை தோட்டக்கலை துறை மாற்றியது. அதன்படி ஜூன் 2-ந் தேதி (அதாவது நேற்று) முதல் மாம்பழ கண்காட்சி தொடங்கும் என தோட்டக்கலை துறை அறிவித்தது.அதன்படி நேற்று பெங்களூரு லால்பாக் பூங்காவில் மாம்பழ கண்காட்சி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகை மாம்பழங்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளான நேற்று காலை நேரத்தில் பெரும்பாலான கடைகள் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ரூ.50 முதல்...
பிற்பகலுக்கு பிறகு மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக வந்தனர். இந்த கண்காட்சியில் மாம்பழங்கள் மற்றும் பலாப்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஒரு கிலோ மாம்பழம், ரூ.50 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நியாயமான விலையில் நுகர்வோருக்கு தரமான மாம்பழங்கள் கிடைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த கண்காட்சியின் நோக்கம் ஆகும். விவசாயிகள் நேரடியாக இங்கு வந்து கடைகள் அமைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
40 வகை பழங்கள்
இந்த கண்காட்சியில் பலாப்பழமும் இடம் பெற்றுள்ளது. சுமார் 40 வகையான மாம்பழங்கள் மற்றும் 12 வகையான பலாப்பழங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாம்பழ சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் பழங்கள் வரத்து சற்று குறைந்துள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது 80 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும்.இங்கு இயற்கை முறையில் பழுத்த பழங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது' என்று கூறினார்.