< Back
தேசிய செய்திகள்
பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் - 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
தேசிய செய்திகள்

பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' - 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
7 March 2023 3:30 AM IST

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

பெங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் எடுத்துச் சென்ற குக்கர் வெடிகுண்டு வெடித்திருந்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் முகமது ஷாரிக் என்கிற ஷாரிக்(வயது 24) என்பவர் பலத்த காயம் அடைந்திருந்தனர். குறிப்பாக ஷாரிக்குக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அரசின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷாரிக்கிற்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், குக்கர் வெடிகுண்டுவை ஆட்டோவில் எடுத்து வரும் போது வெடித்து சிதறியதும் தெரியவந்தது. பலத்த தீக்காயம் அடைந்திருந்த ஷாரிக் முதலில் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அவர் மாற்றப்பட்டு இருந்தார்.

2½ மாதங்கள் சிகிச்சை

பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் தீ விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2½ மாதங்களுக்கும் மேலாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அவரது தீக்காயங்கள் குணமாக தொடங்கியது. இந்த நிலையில், 3 மாதங்களாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷாரிக் நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தீக்காயங்களில் இருந்து அவர் பூரணமாக குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து பயங்கரவாதி ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, பயங்கரவாதி ஷாரிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

அதையடுத்து பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஷாரிக் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷாரிக் வாயை திறக்கும் பட்சத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்